2004-ம் வருடம் ஏற்பட்ட சுனாமியைப் போன்ற மோசமான சேதத்தை ஒக்ஹி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. குமரி மாவட்டதில் இதுவரை 25பேர் இறந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியிருக்கிறது. உயிர்ச்சேதம் எத்தனை என்று தெளிவாகத்தெரிய பல நாட்கள் ஆகும். ஆழ்கடலில் புயலினால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தூத்தூர் பகுதி சார்ந்த சுமார் 250 படகுகளின் துல்லியமான ஜிபிஎஸ் புள்ளிகள் அரசு அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2500ற்கும் அதிகமான மீனவர்கள் இருப்பார்கள். இதைவைத்து எளிதாகவே அவர்களை காப்பாற்ற முடியும். நமக்கு தேவை அதிமான கப்பல்களும், மீட்பு படகுகளும், ஹெலிகாப்டர்களும் மட்டுமே.
நவம்பர் 20 தியதி ஒக்ஹி புயலுக்கான தாழ்வுநிலை காற்றழுத்த மண்டலம் உருவானது. ஆனால், அதை யாரும் தொடர்ந்து கவனிக்கவில்லைபோலும். திடீரென்று நவம்பர் 30ம் தியதி மீனவர்களுக்கு கடலில் போகக்கூடாதென்று அறிவிப்பு வெளியானது. அனைத்து ஊர் கோயில்களிலும் கோயில்மணியடிக்கப்பட்டு மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடாதென்று எச்சரிக்கப்பட்டார்கள். அதன் பிறகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. அப்படியென்றால் ஏன் இவ்வளவு பாதிப்பு என்று கேள்வி எழும்.
தென்மேற்கு கடற்கரையின் மீன்பிடிமுறைகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1.காலையில் மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மதியத்திற்கு பிறகு திரும்புவது. இதில், கட்டுமரம், பாய்மரம், வெளிப்பொருத்து விசைப்படகு அடக்கம். வெளிப்பொருத்து விசைப்படகுகள் வள்ளவிளை மற்றும் மார்த்தாண்டன்துறை கிராமங்களில் அதிகம். கோயில்களில் செய்யப்பட்ட அறிவிப்பு காரணமாக வெளிப்பொருத்து விசைப்படகுகளும், கட்டுமரங்களும், பாய்மரங்களும் தொழிலுக்குச் செல்லவில்லை. வள்ளவிளையிலிருந்து இரண்டு வெளிப்பொருத்து விசைப்படகுகள் சென்றன. அவை பத்திரமாக கரையேறிவிட்டன.
2.ஒரு வாரகாலம் கடலில் தங்கி தொழில் செய்யும் வள்ளம், மற்றும் வெளிப்பொருத்து விசைப்படகுகள். நீரோடி மற்றும் கேரள கொல்லங்கோடு கிராமங்களில் இவை அதிகம். இவர்களில் பலரும் புயல் அறிவிப்பிற்கு முன்பே கடலில் சென்றுவிட்டார்கள். இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தது புயல் கடந்துசென்ற பகுதி. நூற்றிற்கும் அதிகமான வள்ளங்களும், வெளிப்பொருத்து விசைப்படகுகளும் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. நீரோடி கிராமத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு.
3.ஆழ்கடல் விசைப்படகுகள். இவர்கள் 30லிருந்து 45நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பார்கள். தூத்தூர் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான படகுகள் இருக்கின்றன. தற்போது பல படகுகளை தொடர்புகொள்ள முடியவில்லை. பல விசைப்படகுகள் கோவா, குஜாராத் என்று பல துறைமுகங்களில் கரையேறியிருக்கின்றார்கள். பலவிசைப்படகுகளை இந்திய கடற்படையும், சைனா மற்றும் ஜப்பான் கப்பல்களும் காப்பாற்றியிருக்கின்றது. பல படகுகள் லட்சத்தீவின் கரையேறியிருக்கின்றது. பல படகுகள் ஆட்களற்ற வெற்று மணற்தீவுகளில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள். ஆழ்கடலில் அகப்பட்டிருக்கும் சுமார் 250 விசைப்படகுகளின் தகவல்கள் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படகிலும் சுமார் 10-15 மீனவர்கள் இருக்கின்றார்கள். தானாக கரைக்குவந்த படகுகளையும் அரசு மீட்டதாகச்சொல்வதை மீனவர்கள் மிகவும் வருத்தத்துடன் சொல்கின்றார்கள். (வள்ளவிளையில் இதுவரை 5பேர் இறந்தாகச் சொல்லப்படுகின்றது. உண்மையான கணக்கிற்கு சில நாட்கள் ஆகும்.) பல விசைப்படகுகள் மூழ்கிக்கிடப்பதாக பலரும் சொல்கின்றார்கள்.
காப்பாற்றப்பட்டு கரையில் வந்துசேரும் பலரும் தங்கள் நண்பர்கள் நீந்தமுடியாமல் கடலில் மூழ்கிச்செல்வதை பார்த்திருக்கின்றார்கள். இனியும் நேரம் தாழ்த்தும் ஒவ்வொரு நொடியும் உயிரிழப்பை அதிகரிக்கும். எனவே இந்திய  அரசு இதை ஒரு “போர்” எனக்கருதி மீனவர்களை காப்பாற்றவேண்டும்.
சுமார் 3000 மீனவர்கள் இன்னும் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள். மொத்த இழப்புகள் என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஒக்ஹி புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. ஒக்ஹி புயலை தேசியப்பேரிடராக அறிவிக்கமுடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. இதைவிட கேவலமான மனிதாபிமானமற்ற செயல் எதுவுமில்லை. ஒக்ஹி புயலை தேசியப்பேரிடராக அறிவிக்க வேண்டும். மீனவர்களை காப்பாற்றுவதற்கு மத்திய மாநில அரசுகள் துரிதமாகச் செயல்படவேண்டும். உண்மையான பாதிப்பும் இழப்பும் அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லையா அல்லது மீனவர்களை ஒருபொருட்டாக மதிக்கவில்லையா என்று தெரியவில்லை. 25கோடி ஒதுக்கீட்டுடன் இந்த பிரச்சனை முடிந்ததென்று கருதி தமிழ்நாடு அரசு ஒதுங்கிவிட்டது.
மத்திய மாநில அரசுகளிடம் நம்பிக்கை இழந்த கேரளமீனவர்கள் பெரிய விசைப்படகுகளை தங்கள் செலவில் வாடகைக்கு எடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். தூத்தூர் பகுதி மீனவர்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். நம் கண்ணில் காணும் சடலங்களையாவது கரைக்கு கொண்டுவந்து சேர்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *