தென்மேற்கு கடற்கரை கிராமங்களில் தண்ணீர் தேவை தலையாய பிரச்சனையாக இருக்கின்றது. எங்கள் ஊரில் அரைப்படி கிணறுகள் உண்டு. நின்றுகொண்டு கயிறு எதுவும் கட்டாமல் வாளியால் தண்ணீரை கோரி இறைக்கலாம். ஆனால், இப்போது ஜனத்தொகை அதிகரித்தபிறகு பொதுக்கிணறுகள் என்று எதுவுமில்லை. அதைவிட, இப்போது கிணற்று நீர் உப்பாகிவிட்டிருக்கின்றது. கடற்கரைகளில் அளவுக்கதிகமாக கனிம மணலை தோண்டி எடுப்பதால் பலகிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக்கிவிட்டது.(1) அதுபோது, சுனாமிக்குப்பிறகு தமிழக கடற்கரையில் 500 மீட்டர் வரை  நிலத்தடைநீரில் உப்புத்தன்மை அதிகரித்திருக்கின்றது. (2) 

குறும்பனை, கடியப்பட்டினம் போன்ற கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு எப்போதும் உண்டு. வேறு ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்துவரும் அவலம் தொடர்ந்து நடந்து வருகின்றது. தேங்காய்பட்டினத்து மேற்கிலிருக்கும் அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் பஞ்சம் என்பது சமீப காலம்வரை இருந்ததில்லை. தேங்காய் பட்டினம் துறைமுகம் வந்த பிறகு, ஏவிஎம் கால்வாய் சிறிதுசிறிதாக உவர்ப்பாகிக்கொண்டேயிருக்கின்றது. நெய்யாறு மற்றும் குழித்துறை ஆறுகளில் தண்ணீர் வரத்து குறையும்போது, தேங்காய்பட்டினம் சார்ந்த ஊர்களின் நிலத்தடிநீரும் உவர்ப்பாகும் ஆபத்தும் இருக்கின்றது. ஏவிஎம் கால்வாயையும் தூர்வாரி நீர் ஆதாரங்களை அரசு பாதுகாக்கவேண்டும். அல்லது கடற்கரைகளின் நன்னீர் நீர் ஆதாரத்திற்கு துணையாக இருக்கும் ஏவிஎம் கால்வாய் இருந்த தடையம் எதுவும் ஒருசில வருடங்களில் எஞ்சியிருக்காது.

கடற்கரையின் தண்ணீர் பிரச்சனைக்காக நெய்தல் அமைப்புகளின் போராட்டம் மற்றும் மீனவர் குறைதீர்ப்பு கூட்டத்தில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பலனாக கடற்கரையில் புதிதாக கூட்டு குடிநீர்திட்டம் செயலபடுத்தப்படவிருப்பதாக அரசு அறிவிப்பு செய்தது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாள் 40 லிட்டர் தண்ணீர் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கூட்டு குடிநீர் திட்டம் என்னும் பெயரில் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகின்றது. ஆனால், ஒருவருக்கு தினமும் 40லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுவதில் உண்மை எதுவும் இல்லை என்பதை குறும்பனை பெர்லினின் வெளிவரவிருக்கும் “கடலோர கூட்டுகுடிநீர் திட்டம், கடல் தண்ணீய குடிக்க” புத்தகம் ஆவணப்படுத்துகின்றது. ஆறுபேர் கொண்ட குடும்பத்திற்கு வாரம் ஒருமுறை பத்துகுடம் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுவதாகவும் சொல்கின்றார். விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவை அதிகரித்துக்காட்டுவதற்காக மக்கள் தொகையை குடிநீர் வடிகால் வாரியம் மூன்றில் ஒரு பங்காக குறைத்துக் காட்டியிருப்பது ஏமாற்று வேலை.

இந்த 40லிட்டர் என்பது 2001-2002ற்கான தமிழக அரசு வெளியிட்ட நீர்த்தேவையை ஆதாரமாகக்கொண்டது.(3) ஆனால், நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 70 லிட்டர் தண்ணீர் வினியோகிக்கவேண்டும்.(4) கொல்லங்கோடும் குளச்சலும் நகரப்பஞ்சாயத்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. நமது அண்டை மாநிலமான கேரள அரசு கிராமப்புறங்களில் ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 100லிட்டரும் நகர்புறங்களில் 150 லிட்டரும் வினியோகிக்கப்படுமென்று 2016ம் வருடம் அறிவித்து செயல்படுத்துகின்றது.(5)  எனவே, தமிழக எல்லையிலிருக்கும் நீரோடி கிராமத்தின் கடைசி தண்ணீர் பைப்பில் வாரம் ஒருமுறை 10 குடம் தண்ணீரும், நீரோடி கிராமத்தை அடுத்திருக்கும் கேரளாவின் பொழியூர் கொல்லங்கோடு கிராமத்திற்கு தினமும் ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் 100 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கிடைப்பது விந்தையானது. 

இந்திய தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒரு நாளுக்கான சராசரி தண்ணீர் தேவையை நிர்ணயித்திருக்கின்றது. (IS 1172: 1993, Reaffirmed 2002).(6) இதன்படி 20,000 வரையிலான மக்கள்தொகை கொண்ட சமூகங்களுக்கு தினமும் ஒவ்வொருவருக்கும் நீர்தேக்கதொட்டியென்றால் (standard post) 40லிட்டரும், வீடுகளுக்கு நேரடி இணைப்பென்றால் 70முதல் 100லிட்டர் வரை தண்ணீர் கிடைக்கவேண்டும். 20,000 முதல் 1,00,000 வரையிலான மக்கள்தொகைகொண்ட சமூகங்களுக்கு தினமும் 100முதல் 150 லிட்டர் வரையும், ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள்தொகையென்றால் 150முதல் 200 லிட்டர் தண்ணீர் கிடைக்கவேண்டும். இதை கடற்கரைகிராமங்களில் தற்போது விநியோகிக்கப்படும் தண்ணீரை ஒப்புநோக்கினால், கடற்கரையில் தண்ணீர் வினியோகம் எதுவும் இல்லையென்றே சொல்லவேண்டும். 

தமிழக அரசு 2010ம் வருடம் நடத்திய மீனவர்களின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,43,388 கடல்தொழில் செய்யும் மீனவர்கள் இருக்கின்றார்கள்.(7) இதை அடிப்படியாக கொண்டாலும் கூட, கடற்கரை கிராமங்களில் ஒவ்வொருவருக்கும் தினமும் 150முதல் 200 லிட்டர் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுக்கப்படவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கன்னியாகுமரி மீனவ கிராமங்களின் உண்மையான மக்கள்தொகையை கணக்கில் கொள்ளவேண்டும். கிராமப்பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்தென்று சிதறடிக்கப்பட்டிருக்கும் மீனவ கிராமக்களை, மக்கள்தொகையை கணக்கில்கொண்டு நகரப்பஞ்சாயத்துகளுக்கான அளவுப்படி தண்ணீர் கொடுக்கப்படவேண்டும்.

அடிப்படை தேவையான தண்ணீருக்காக சாத்வீக முறையில் போராடும் நண்பர் குறும்பனை பெர்லினும் நெய்தல் மக்கள் அமைப்பினரும் பாராட்டுதலுக்குரியவர்கள்!

[குறும்பனை பெர்லினின் “கடலோர கூட்டுகுடிநீர் திட்டம் – கடல் தண்ணீய குடிக்க” என்னும் கட்டுரை புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை]

Reference:  

  1. https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25407988
  2. https://www.researchgate.net/publication/281772396_Improving_spatiotemporal_groundwater_estimates_after_natural_disasters_using_remotely_sensed_data_-_a_case_study_of_the_Indian_Ocean_Tsunami
  3. http://cms.tn.gov.in/sites/default/files/documents/Tamil%20Nadu%20Water%20Supply%20and%20Drainage%20Board.pdf
  4. http://www.twadboard.gov.in/twad/urban_water.aspx
  5. http://spb.kerala.gov.in/EconomicReview2016/web/chapter04_12.php
  6. http://dasta.in/wp-content/uploads/2015/04/CB_Code_2002.pdf
  7. http://iomenvis.nic.in/index3.aspx?sslid=6958&subsublinkid=266&langid=1&mid=1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *