[குறும்பனை சி. பெர்லின் எழுதி விரைவில் வெளிவரவிருக்கும் சேலுகேடு குறுநாவலுக்கு என்னுடைய அணிந்துரை]

ஒரு சமூகத்தின் சாதனை என்பது, அது தன்னிடமிருந்து எத்தனை எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தது. எழுத்தாளர்களை, சிந்தனையாளர்களை, இலக்கியவாதிகளை உருவாக்காத எந்த சமூகத்திற்கும் எதிர்காலமில்லை. எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் குரல். அந்த சமூகத்தின் ஆன்மாவை ரத்தமும் சதையுமாக முன்வைப்பவர்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த வலியையும் தன்னுள் உணர்ந்து எழுத்தாக்குபவர்கள். எழுத்தாளனின் மனம், தான்சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்த சிந்தனைக்களம். எழுத்தாளனின் சிந்தனை பல தலைமுறைகளைக் கடந்திருக்கும். எனவேதான் எழுத்தாளன் அவன் வாழும் காலகட்டத்தில் எந்தவித கவனிப்புமின்றி, புறக்கணிக்கப்பட்டு புறம் தள்ளப்படுகிறான். அவனது நேர்மையான, சமரசமற்ற போக்கிற்காக சமூகத்தின் பொது எதிரியாக்கப்படுகிறான். ஆனால் இவற்றை எள்ளளவும் பொருட்படுத்தாமல் தங்கள் எழுத்துச்செயல்பாடுகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.

என்னுடைய ஊரில் மிகச்சிறந்த நூலகம் ஒன்றிருந்தது. 1948-ம் வருடம் உருவாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்களும் உண்டு. நூலகம் என்பது அந்த கிராமத்தின் மூளையைப் போன்றது. தற்போது, எங்கள் ஊர் நூலகம் பயன்பாட்டில் இல்லாமல், புத்தகங்கள் செல்லரித்துக்கிடக்கிறது. என்னுடைய இலக்கிய வாசிப்பு என்னுடைய ஊரிலிருந்து துவங்கியது. அனைத்து புத்தகங்களும் வெளி நிலத்து வாழ்க்கையை, பண்பாடுகளை பேசுபவையாகவே இருந்தன. நாளிதழ்களில் எங்கள் ஊர்ப்பெயர் வந்தாலே, உணர்ச்சிவயப்பட்டு பெருமையாக பேசிக்கொள்ளும் காலகட்டம் அது. ஆனால், நூலகத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களில், இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய சங்க இலக்கியங்ககளைத் தவிர, ஒன்றுகூட மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசவில்லை. எங்கள் ஊர்களின் சிறு குறிப்பு கூட இல்லை. ஏன் இல்லை என்னும் கேள்வி எப்போதுமுண்டு.

நான் கல்லூரியில் படிக்கும்போது, எங்களின் பக்கக்கத்து ஊரான தேங்காய்பட்டினம் ஊரைச்சார்ந்த மதிப்பிற்குரிய தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் எழுதிய ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவல் துணைப்பாடமாக இருந்தது. அதை மீண்டும் மீண்டும் பலமுறை படித்திருப்பேன். காரணம், அதில் என்னுடைய ஊரின் பெயரும் ஓரிடத்தில் வரும். அதைவிட, தென்மேற்கு கடற்கரை ஊர்களில், முஸ்லிம் மக்கள் மீனவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். எனவே, அந்த நாவலின் கதையும் கதைக்களனும் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஆனாலும், அந்த நாவல் மீனவர்களின் வாழ்க்கையைப்பற்றிப் பேசவில்லை என்பது எனக்கு சிறிது ஏமாற்றமும் உண்டு. மீனவர்களின் வாழ்க்கையை எழுதவேண்டுமென்ற ஆர்வம் அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது.

எழுதுவதற்கான வாய்ப்பு, எழுத்தாளர் ஜெயமோகனின் சொல்புதிது இலக்கியக் குழுமத்தில் இணைந்த பிறகே வாய்த்தது. இலக்கிய எழுத்து என்னவென்பதை அங்கிருந்தே கற்றுக்கொண்டேன். அதுவரை கடல்சார்ந்த இலக்கிய எழுத்தாக நான் படித்தது தோப்பில் முகம்மது மீரான், ஜோ. டி. குரூஸ் மற்றும் வண்ணநிலவன் ஆகியோரின் எழுத்தை மட்டுமே. மீனவர்களின் வாழ்வியல் மற்றும் கடல் சூழியல் சார்ந்து முனைவர் வறீதையா கான்ஸடன்டீன் அவர்களின் கட்டுரைகளைப் படித்திருந்த போதிலும், தென்மேற்கு கடற்கரை ஊர்களிலிருந்து, யாரும் இலக்கியம் படைக்கவில்லை என்னும் வருத்தமுண்டு. குறும்பனை பெர்லினின் அறிமுகம் கிடைத்த பிறகு அந்த எண்ணம் தவறானது என்பதை அறிந்துகொண்டேன்.

அவருடைய அறிமுகம் மிகவும் தற்செயலானது. என்னுடைய துறைவன் நாவல் வெளிவருவதற்கு காலதாமதமும், வெளிவருமா வராதா என்னும் ஐயமும் ஏற்பட்டு நம்பிக்கை இழந்தபோது, சமூக ஆர்வலரும், ஐநா சபையின் சர்வதேச இளைஞர் மன்றத்தின் உறுப்பினருமான நண்பர் திரு. ஜஸ்டின் ஆன்றணி அவர்களின் அறிமுகத்தின் பேரில் குறும்பனை பெர்லினை தொடர்புகொண்டேன். துறைவன் நாவலை படித்துவிட்டு, உடனே வெளிவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அன்றிலிருந்து தொடர்ந்து எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். என்னுடைய ஒரு கட்டுரையை கடலோரம் என்னும் பத்திரிகையில் வெளியிட்டு என்னை கௌரவப்படுத்தினார். ஒரு அச்சுப்பத்திரிகையில் என்னுடைய கட்டுரையும், என்னுடைய புகைப்படமும் வெளிவந்தது அதுவே முதல்முறை.

நெய்தல்மண் உற்பவித்த நெய்தல் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர்களாக நான் கருதுவது, நாவல் எழுத்தில் ஜோ. டி. குரூஸ், சிறுகதைகளுக்கு குறும்பனை சி. பெர்லின் மற்றும் சமூகவியல் மற்றும் சூழியல் கட்டுரைகளுக்கு முனைவர் வறீதையா. இவர்களின் எழுத்துக்களைப் படிக்காமல் நெய்தல் படைப்பாளிகள் நெய்தல் இலக்கியத்தை முன்நகர்த்த முடியாது.

நெய்தல் இலக்கிய படைப்புகள் சார்ந்து, தென் கிழக்கு கடற்கரையில் ஜோ.டி.குரூஸ் ஒரு விடிவெள்ளியென்றால், தென் மேற்க்கு கடற்கரையின் துருவ நட்சத்திரம் குறும்பனை சி. பெர்லின். இவர்கள் இருவருமின்றி நெய்தல் இலக்கிய வானமில்லை. ஒரே கடற்கரை என்பதால் குறும்பனை சி. பெர்லினின் படைப்புகள் எனக்கு மிகவும் நெருக்கமானது. அவரது அனைத்து சிறுகதை தொகுப்புகளையும் ஒன்றும் விடாமல் படித்திருக்கின்றேன். கதை என்பதைவிட நெய்தல் மக்களின் வாழ்க்கையை தன்னுடைய படைப்புகளில் செதுக்கியிருக்கிறார். எந்தவித உயர்வு நவிற்சியுமின்றி உள்ளது உள்ளபடி ஆவணப்படுத்தியிருக்கிறார். நேர்மையாக எழுதப்படாத இலக்கியத்திற்கு மதிப்பில்லை. இலக்கியம் என்பதே வாழ்க்கையை, மொழியை, பண்பாடை ஆவணப்படுத்துவதுதான். அந்த வகையில் குறும்பனை பெர்லின் எங்கள் காலகட்டத்தின், ஒரு பெரும் நெய்தல் படைப்பாளி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சேலுகேடு ஒரு சிறந்த குறுநாவல். சேலுகேடு என்றால் கடல்கொந்தளிப்பு. கடல்கொந்தளிப்பில் அகப்படாத மீனவர்கள் இருப்பது அரிது. ஒவ்வொரு மீனவனிடமும் ஆயிரம் கதைகளிருக்கும். ஒரே கதை பல ஊர்களிலும் ஒரே மாதிரியாகவே நடந்திருக்கும். ஜோ.டி. குரூஸ் அவர்களின் ஆழி சூழ் உலகும், என்னுடைய துறைவன் நாவலின் கடலாழமும், குறும்பனை பெர்லினின் சேலுகேடும் ஒவ்வொரு ஊரிலும் நடந்த, இப்போது நடக்கும், இன்னும் நடக்கவிருக்கும் கதைகள்.

நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய நண்பனின் அப்பா கடலில் காணாமல் போனார். அவரை கண்டுபிடிப்பதற்காக படகுகளில் சென்று கடல் முழுக்கத் தேடினார்கள். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் ஒரு கட்டுமரத்தில் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருப்பது அனைத்து படகுகளுக்கும் தெரிந்தது. அவர் மீன்பிடித்துக்கொண்டிருப்பதன் காரணமாக, அவரை பொருட்படுத்தாமல் படகுகள் திரும்பி வந்தன. காணாமல் போனவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்றாம் நாள், அந்தக் காட்டுமரம் கரைக்கடலுக்கு வந்தது. ஆனால், கட்டுமரத்தை செலுத்தாமல், தொடர்ந்து மீன்பிடித்துக்கொண்டிருப்பது அனைவரையும் சந்தேகம் கொள்ளச்செய்தது. அவர் காணமல்போனவர் என்பது பக்கத்தில் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. முதல் நாள் கடலில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கி அவர் இறந்திருக்கிறார். ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற என்னுடைய நண்பனும் உறவினரும் கடலில் காணாமலாகி, உயிர் பிழைக்க பச்சை மீனைத்தின்று, மூன்றாம் நாள் மயிர்நுனியில் உயிரிருக்க, நடக்கமுடியாமல், காற்று மற்றும் நீரோட்டத்தின் போக்கில் கரைவந்து சேர்ந்தார்கள். இரவு நேரங்களில் படகில் கப்பல் மோதியதால், படகே சமாதியாக, உடைந்த படகுடன் கடலில் மூழ்கி பலரும் இறக்கின்றார்கள். இன்று [அக்டோபர் 13,017], என்னுடைய பக்கத்து ஊரான சின்னதுறை கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகு, கப்பல் மோதியதால் விபத்துக்குள்ளாகி, நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு ஆயிரம் சம்பவங்கள் தினமும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இந்த சம்பவங்களை தனித்துவமான கதையாக மாற்றுவதில் தான் எழுத்தாளனின் திறமை அடங்கியிருக்கிறது. குறும்பனை பெர்லினின் கதைகளை படிக்கும்போது நான் நுட்பமாக கவனிப்பது அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை. வார்த்தைகள் என்பது, ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகள். குறும்பனை பெர்லின் சாதாரணமான, மக்கள் பேசும் யதார்த்தமான வார்த்தைகளை எந்தவித திரிபுமின்றி பயன்படுத்துகிறார். அவரை அறியாமல் மொழியை ஆவணப்படுத்துகிறார். நுணுக்கமான சித்தரிப்புகளை வார்த்தைகளைக் கொண்டு வென்றெடுக்கிறார். எனவேதான் அவருடைய கதைகள் கடற்கரை மண்வாசத்துடன், தனித்துவமாக இருக்கிறது.

சில சொற்கள் சிறுவயது சம்பவங்களை நம் கண்முன் கொண்டுவரும். இந்த குறுநாவலில் ‘மட்டும் பெரமும்’ என்று ஓரிடத்தில் வருகிறது. ஒவ்வொரு கடற்கரை கிராமங்களிலும் வார்த்தை பயன்பாடு வேறுமாதிரி இருக்கும். பெரம் என்பது என்னுடைய அப்பா பயன்படுத்திய வார்த்தை. மட்டு என்றால் நூற்றுக் கணக்கான தூண்டில்களை கொடிபோல் கட்டியிருக்கும் மீன்படி சாதனம். பெரம் என்றால் மெல்லிய வடம். இதை கயிறு என்றும் சொல்வார்கள். பெரம் என்பது எனக்கு மானசீகமானது. தூண்டில்களை பெரம்/கயிறு/வடத்தில் கட்டியிருப்பார்கள். தூண்டில்கள் கடலில் கிடைக்க பெரம் நம்முடைய கையிலிருக்கும்.

பெரத்தை கயிறு திரிப்பதுபோல் பருத்தி நூலிலிருந்து திரித்தெடுப்பார்கள். அதை பயன்படுத்துவதற்கு முன்பு, இரண்டு பேர் கயிறு/பெரத்தின் இரண்டு நுனிகளையும் தங்கள் பலமுள்ளமட்டும் எதிர்திசையில் இழுத்து, அதன் நெகிழ்ச்சித் தன்மையை இல்லாமலாக்குவார்கள். அல்லாத பட்ஷத்தில் பெரிய மீன்பிடித்து இழுக்கும்போது, பெரம் நம்முடைய கைக்கு அடங்காமல் நெகிழ்ச்சியாக இருக்கும். ஒருமுறை ஒருமுனையில் நானும், மறுமுனையில் என்னுடைய அப்பாவும் பெரத்தை இழுத்தபோது, அவருடைய பலத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாமல், நான் மல்லாக்காக தரையில் விழுந்தது இன்னும் நினைவிருக்கிறது. பெரம் என்னும் வார்த்தையைப் போல், சேலுகேடு குறுநாவலில் எண்ணை தேய்த்த வாளி, பொத்தட்டோ, பத்தறா, அன்னளி, நாச்சியார், செல்லம்போல, இரண்டு பாளி கதவு என்று பல மந்திர வார்த்தைகளை குறும்பனை பெர்லின் பயன்படுத்தியிருக்கிறார்.

பார் லாகர்குவிஸ்ட் எழுதிய பரபாஸ் என்னும் நாவலின் முதல் வரி “அவர்கள் எவ்வாறு சிலுவையில் தொங்கினார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்” என்று துவங்குகிறது. அதைப்போலத்தான், ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீனவர்கள் எவ்வாறு மூழ்கி இறப்பார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவர்களை காப்பாற்ற முடியாமல் கைவிரிகோலமாக ஊர்முழுக்க ஒப்பாரிவைத்து அழுதுநின்றது. உடனே காப்பாற்றவேண்டுமென்றால் அரசின் அதிவேக விசைப்படகு அல்லது ஹெலிகாப்டர் வேண்டும். அதைப்பெறுவதிலும் சிக்கல்கள். மீனவர்களே காணமல்போன தங்கள் நண்பர்களைத் தேடிச்செல்லவேண்டிய சூழல். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும்கூட, விபத்திற்குள்ளான மீனவர்கள் இரண்டு மூன்று நாட்கள் தாங்கள் காப்பாற்றப்படும்வரை ஆழ்கடலில் நீச்சலடித்துக்கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை நம்முடைய அரசு மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களின் தோல்வி என்றே சொல்வேன்.

பெர்லின் ஒரு களப்பணியாளர் என்பதால், அவரின் அனைத்து கதைகளிலும் அரசு சார்ந்த பிரச்சனைகளை சொல்வதற்குத் தவறுவதில்லை. படகையும் கட்டுமரத்தையும் மீனவர்கள் வேண்டுமென்றே சேதப்படுத்துவார்கள் என்பதால், மீன்பிடி சாதனங்களுக்கு வங்கிக் கடனோ, ஆயுள்காப்பீடோ கிடைப்பதில்லை. ஆனால், வாங்கிக்கடன் பெற்று, ஆயுள்காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக, வேண்டுமென்றே விபத்திற்குள்ளாக்கும் கப்பல்களுக்கு கடன் பெறுவதில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் பலநூறு கோடிகள் விவசாயக் கடன் தள்ளுபடியாக அரசு அறிவிக்கிறது. மீன்பிடித்தொழிலும் விவசாயத்துறையின் கீழ்தான் வருகிறது. ஆனால், மீனாவர்களுக்கு விவசாய மற்றும் மீன்பிடிக் கருவிகளுக்கான கடனுமில்லை; கடன் தள்ளுபடி அனுகூல்யமும் இல்லை. இதைப்போல், இழுவைமடிப் பிரச்சனை, வெளிப்பொருத்து இயந்திரங்களுக்கான மானியம் என்று மீனவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை சொல்லிச்செல்கிறார்.

இந்த குறுநாவலில் மீனவர்களின் ஒருசில யதார்த்தமான குணநலனையும் அவர் விமர்சிக்கத்தவறவில்லை. கோயிலில் ஆழ்ந்த ஜெபத்திலிருக்கும் பாதிரியாரை, கோயிலினுள் செருப்புடன் சென்று, அவரது தியானத்தை கலைக்கும் அடிப்படை மரியாதையின்மை நம்மை முள்போல் குத்துகிறது. இருப்பினும் அதன் மறுபக்கம், ஜெபம் செய்வதன் முக்கியத்துவத்தையும், குடும்பம் பெண்களால் கட்டமைக்கப்படுவதையும், குடும்ப வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பையும், சுக துக்கங்களில் சமூகத்தின் கூட்டு மனநிலை போன்ற நேர்மறையான/சாதகமான அம்சங்களை விரிவாகவே ஆசிரியர் பேசுகிறார். சேலுகேடு குறுநாவல் மீனவர்களின் பாடுகளைப்போல் முடிவில்லாமல் தொடர்ந்து செல்கிறது. அது ஒரு புதிய நாவலுக்கான துவக்கமாகக் கூட இருக்கலாம்.

ஒரு சிறந்த நெய்தல் படைப்பை ஒரு நெய்தல் படைப்பாளியால்தான் உருவாக்க முடியுமென்று நம்புகிறேன். இதில் விதிவிலக்குமுண்டு. சிறுகதை உலகில், கடல் சார்ந்து எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக நான் கருதுவது, திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் கோம்பை என்னும் சிறுகதை. வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ ஒரு சிறந்த ஆக்கம். நான் சொல்லவருவது கடல் சார்ந்த மிக நுணுக்கமான தகவல்களைக் கொண்ட ஆக்கங்களை. அந்த வகையில் குறும்பனை பெர்லினை எங்கள் காலகட்டத்தின் ஒரு சிறந்த நெய்தல் படைப்பாளி என்றே சொல்வேன்.

சேலுகேடு குறுநாவல் வாசகர்களுக்கு ஒரு சிறந்த வாழ்வனுபவமாக இருக்கும். சேலுகேடு என்னும் ஒரு வாழ்க்கை அனுபவத்தை இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தியதற்காக, குறும்பனை பெர்லின் அவர்களுக்கு என் நன்றியும், வாழ்த்துக்களும்! சேலுகேடு குறுநாவலுக்கு என்னை அணிந்துரை எழுதக் கேட்டுக்கொண்டதை, அவருக்கு என்மீதிருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே எடுத்துக்கொள்கிறேன். அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *