ஒவ்வொரு தேர்தலிலும் மீனவர்களுக்கு பலதரப்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் அதில் எவையும் நிறைவேற்றப்படுவதில்லை என்று துணிந்து சொல்லலாம். குறைந்த பட்சம் கடலரிப்பினால் உடைந்த சாலைகள் கடந்த எட்டு வருடங்களாக இன்னும் சீர்செய்யப்படாமல் கிடக்கின்றது. பாராமுகம் காட்டுவதில் கட்சி வேறுபாடில்லை. பொருளியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு, மீனவர்களின் முக்கியமான அடிப்படை தேவையாக சில நலத்திட்டங்கள் தேவைப்படுகின்றது. என்னுடைய பார்வையில், மீனவர்களின் எதிர்கால நலனுக்கு முக்கியமானதாக எனக்கு தோன்றுவதை பட்டியலிட்டிருக்கின்றேன். இவற்றை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள் போற்றுதலுக்குரியவை. 

1. மீன்வளத்துறைக்கென்று தனியான மத்திய அமைச்சகம் வேண்டும். 

2. குறைந்த பட்சம் மூன்று தகுதிவாய்ந்த மீனவர்களை மீன்வளத்துறைக்கான ஆலோசனைக் குழுவில் நிரந்தரமாக இடம்பெறச்செய்யவேண்டும். 

3. மீனவர்களுக்கென்று தனியாக சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கவேண்டும். அரசியலில் ஒதுக்கப்பட்டிருக்கும் மீனவர்களை அரசியல் அதிகாரத்திற்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

4. கடற்கரை கிராமங்களை மக்கள் தொகை அடிப்படையில், ஒன்று அல்லது பல கிராமங்களை இணைத்து, தனித்தனி பஞ்சாயத்துகளாக மாற்றவேண்டும். 

5. இந்திய கடல்பரப்பில், வெளிநாட்டுக் கப்பல்களுக்கு மீன்பிடி உரிமங்கள் கொடுக்கக்கூடாது. LOP (Letter of Permit) என்னும் முறையை தடைசெய்யவேண்டும். இதை நிரந்தர சட்டமாக்கவேண்டும். 

6. அனைத்து ஆழ்கடல் விசைப்படகுகளுக்கும் AIS (Automatic Identification System) கருவிகளும், சேட்டலைட் செல்போன்களும் வழங்கவேண்டும். இந்த இரு கருவிகளும் அனைத்து ஆழ்கடல் படகுகளுக்கும் கட்டாயமாக்கவேண்டும். 

7. ஆழ்கடலில் மீனவர்களை பாதுகாப்பதற்காக அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்த அண்மை/ஆழ்கடல் ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப்படுத்தவேண்டும். 

8. மீனவர்களைக்கொண்ட தேசிய பேரிடர் படையை அமைக்கவேண்டும். இதில் அங்கம் பெறும் தகுதிவாய்ந்த மீனவர்களை பகுதி நேர மத்திய அரசு ஊழியர்களாக கணக்கில் கொள்ளவேண்டும். 

9. கடற்கரை, கடல், மீனவளம் மற்றும் மீனவர்கள் சார்ந்த அனைத்து சட்டதிட்டங்களும் மீனவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைபப்டுத்தவேண்டும். கடல்சார்ந்த சட்டங்கள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் கிடைக்கச்செய்யவேண்டும். 

10. கடற்கரைகளில், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில், கனிம மணல் அகழ்வை, கட்டுமானங்களை தடைசெய்யவேண்டும். இதுவரையிலான மணல் அகழ்வு மற்றும் கட்டுமாங்களினால் கடற்கரைகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் கடலரிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். 

11. கடலரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும். 

12. கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் மீனவர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். 

13. மீனவர்களை பழங்குடியினர் (Scheduled Tribe) பட்டியலில் இணைக்க வேண்டும். 

14. கடற்கரை கிராமங்களில் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தவேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும், வசதியான விளையாட்டு மைதாங்களை உருவாக்கவேண்டும். தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களையும் நியமிக்கவேண்டும். உள்ளூரில் தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். 

15. ஒவ்வொரு மாவட்டத்திலும் மீனவளக்கல்லூரிகள் மற்றும் மீன்வள ஆய்வு நிறுவனங்களை உருவாக்கவேண்டும். அதில் மீனவ மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். 

16. அரசு கல்வி நிறுவங்களில் வானிலை சார்ந்த ஆய்வுகளை ஊக்கப்படுத்தவேண்டும். அரசு வானிலை மையங்களை நவீனப்படுத்தவேண்டும். அதுபோல், கடல்சார்ந்த கட்டுமானங்களுக்கான ஆய்வுகளை மத்திய அரசின் CSIR (Council of Scientific and Industrial Research) அமைப்பு முன்னெடுத்து செய்யவேண்டும். 

17.ஆய்வுகளை உள்ளூர் தனியார் நிறுவங்களுக்கும், வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதை தடைசெய்யவேண்டும். ஆய்வுகளை வெளிப்படையாக பொதுவெளியில் கிடைக்கச்செய்யவேண்டும். அந்த ஆய்வுகளை தகுதிவாய்ந்த மீனவர்கள் அல்லது மீனவ அமைப்புகள் கூராய்வு செய்வதற்கு அனுமதிக்கவேண்டும். 18. அண்மைக்கடல் பகுதியில், பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிக்கு 50 நாட்டிகல் மைல்களுக்கு உட்பட்ட பகுதிகள் வழியாக கப்பல்களுக்கான புதிய வழித்தடங்கள் உருவாக்குவதை தடுக்கவேண்டும்.

19. சூறாவளிக்கான தேசிய பேரிடர் மேலாண்மையின் நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். 

20. கடல் சார்ந்த பேரிடரின் போது, மாநிலங்கள் இணைந்த மாவட்ட ஆட்சியர்களின் கூட்டுக்குழுக்களை உருவாக்கவேண்டும். இந்த கூட்டுக்குழு மீனவர்களை பாதுகாப்பதுமுதல், பேரிடருக்கு பின்னரான புனர்வாழ்வு வரை தொடரவேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *