எதிர் வெளியீடாக வந்திருக்கும் இனயம் துறைமுகம் புத்தகத்தின் படகோட்டிகள் கட்டுரையின் ஒருபகுதி. புத்தம் வாங்க: http://www.ethirveliyedu.in/shop/இனயம்-துறைமுகம்/

-1-

15ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக வெளிநாடுகளை கைப்பற்றுவதில்  போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் தீவிரம் காட்டின. அப்போது இந்த இரண்டு நாடுகள் மட்டுமே கடலில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன. 1498-ம் வருடம் போர்ச்சுகல் நாட்டு மாலுமி வாஸ்கோ ட காமா கடல்வழிப்பயணமாக இந்தியாவின் கோழிக்கோட்டில் கால்பதித்தார். 1588ம் வருடம் இங்கிலாந்து ஸ்பெயின் கடற்படையை தோற்கடித்த பிறகு, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தாத கிழக்கிந்திய நாடுகளில் கப்பல்தொழில் செய்வதற்கு லண்டன் வியாபாரிகள் அப்போதைய இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்திடம் கோரிக்கைக்கி வைத்தார்கள். 1600 டிசம்பர் மாதம் ராணி எலிசபெத் கிழக்கிந்திய நாடுகளில் வணிகத்திற்கு அனுமதியளித்ததுடன், 101 ஆங்கில வியாபாரிகளால் துவங்கப்பட்ட ஜான் கம்பெனி என்னும் அமைப்பிற்கு வியாபாரம் செய்வதற்கான முழு உரிமையையும் கொடுத்தார். இந்த கம்பெனி பின்னாளில் கிழக்கிந்தியக் கம்பெனி என்று பெயர் மாற்றம் பெற்றது.

 

1612-ம் வருடம், குஜராத்தின் சுவாலி கடற்கரையில் போர்ச்சுகீசிஸ்யர்களுடன் நடந்த யுத்தத்தில் கிழக்கிந்திய கம்பெனி வென்று சூரத்தில் தங்கள் முதல் காலனியை நிறுவியிருந்தது. மசூலிப்பட்டினம் ஜவுளி உற்பத்தியில் புகழ்பெற்றிருந்தது. துணிகளின் நிறத்திற்கு, ஒரு குறிப்பிட்டவகை தாவரத்திலிருந்து உருவாக்கிய சிவப்பு சாயத்தை பயன்படுத்தினார்கள்.  இந்த வகை நிறச்சாயமுள்ள துணிகளுக்கு சந்தையில் நல்ல மதிப்பிருந்தது. அந்த செடிகள் மசூலிப்பட்டினத்திற்கு அருகில் மட்டுமே வளர்ந்தது. ‘மசூலிப்பட்டினம் சின்ஞ்’ என்னும் அந்த குறிப்பிட்டவகை வர்ணம் கொண்ட ஜவுளி வியாபாரத்திற்காக இந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு கிழக்கிந்திய கம்பெனி வந்தது. 1620-ம் வருடம் மசூலிப்பட்டினத்தில் காலனியை அமைத்த கிழக்கிந்திய கம்பெனியால் அங்கு நிலைகொள்ள முடியவில்லை. எனவே, டச்சு காலனியான புலிக்காடிற்கும் போர்ச்சுகீஸ் காலனியான சாந்தோமிற்கு வடக்கிலும் குடியேறி வியாபாரம் செய்வதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. புலிக்காடில் துறைமுகம் ஏதுமில்லை. அங்கு வந்த கப்பல்கள் சேதமின்றி திரும்பியதில்லை என்று சொல்லப்படுகின்றது.

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகியான பிரான்சிஸ் டே, வந்தவாசி மற்றும் பூந்தமல்லி நாயக்கர்களிடம் சென்னையில் குடியேறுவதற்கான அனுமதியை கோரினார்.  1639 ஆகஸ்ட் 22-ம் நாள் நாயக்கர்கள் பிரான்சிஸ் டேயின் கோரிக்கையை  ஏற்று, ஏற்கெனவே அவர்கள் தங்கள் தந்தையின் பெயரால், சென்னப்பட்டணம் என்னும் சிறு நகரத்தை உருவாக்கியிருந்தார்கள். அதற்கு தெற்கிலும் போர்ச்சுகீசியர்களின் சாந்தோமிற்கு வடக்கிலும் ஆறு மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட தீவுப்பகுதியில் குடியேறி வியாபாரம் செய்ய அனுமதியளித்தார்கள்.

 

[பிரான்சிஸ் டே சென்னையில் குடியேறுவதற்கான அரசாணைப் பத்திரத்திதை, சந்திரகிரி நாயக்க மன்னர் வெங்கடாத்திரி (வெங்கடா III) நாயக்கரிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்றும், ஆனால் அது தவறான கருத்து என்றும் சொல்லப்படுகின்றது. அதுபோல், அரசாணையில் சொல்லப்பட்டிருக்கும் 1639 ஜூலை 22 என்பது தவறானதென்றும்  1639 ஆகஸ்ட் 22 என்பதே சரியானதென்றும் சொல்லப்படுகின்றது.]

 

நாயக்கர்கள் அனுமதியளித்த பகுதியில் சென்னைப்குப்பம்(Chennaik Coopom), மதராஸ்குப்பம்(Madras Coopom),  ஆற்றுக்குப்பம் (Arkoopam) மற்றும் மலைப்பட்டு (Maleput) என்று நான்கு கிராமங்கள் இருந்தன. சென்னை, மதராஸ் மற்றும் ஆற்றுக்குப்பம் என்பவை மீன்பிடி கிராமங்கள். ஆற்றுக்குப்பம் 1802-ம் ஆண்டுவரை படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் கிராமமாக இருந்தது. மலைப்பட்டு கிராமம் சென்னை கோட்டைக்கு மேற்கில் இருந்தது. அந்த ஊர்ப்பெயர் தற்போது வழக்கொழிந்துவிட்டது. அப்போது, மதராஸப்பட்டினத்தில் 15-20 மீன்பிடி குடிசைகள் இருந்தன. 1640ல் மதராஸ்பட்டினத்தில் தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டைக்கான அடிக்கல் போடப்பட்டு 1666-வருடம் கட்டிமுடிக்கப்பட்டது.

 

அப்போது சென்னையில் துறைமுகம் இருக்கவில்லை. கப்பல்கள் திறந்தவெளிக் கடலில் நங்கூரமிடப்பட்டு, அதிலிருந்து சரக்குகளும் பயணிகளும் கட்டுமரத்திலும் படகிலும் கோட்டைக்கு முன்னாலிருந்த கடற்கரை சாலைக்கு மீனவர்களால் கொண்டுவரப்பட்டார்கள். படகிற்கு மசுளா என்று பெயர். நீண்ட மரப்பலகைகளை தேங்காய் நாரினால் துணிநெய்வதுபோல் இணைத்து வள்ளங்களை உருவாக்குவார்கள். வள்ளங்களின் அடிப்பாகம், அலையில் கவிழ்வதற்கு வாய்ப்பில்லாம், பரந்து இருக்கும். மசுளா படகின் உதவியுடன் சென்னையில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்த மீனவர்கள் முக்குவர்கள் என்றும் படகோட்டிகள் என்றும் அறியப்பட்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி சென்னையில் வருவதற்கு  முன்பே முக்குவர்கள் சாந்தோமில் படகோட்டிகளாக வேலைசெய்துகொண்டிருந்தார்கள்.

 

தற்போதும் கேரளக்கடற்கரையில் கரைமடி வள்ளங்கள் இந்த முறையிலேயே கட்டப்படுகின்றன. கரைமடிக்கு பெயர்போன, பூத்துறை, வள்ளவிளை மற்றும் நீரோடி கிராமங்களில் இந்த வள்ளங்களை காணலாம். முன்பு, வள்ளவிளை கிராமத்தில் இந்த வள்ளங்கள் பெருமளவில் கட்டப்பட்டது. தற்போது, வள்ளவிளைக்கு கிழக்கில் இடைப்பாடு பகுதியில் இந்த படகு கட்டுமானம் நடக்கின்றது.

 

மதராஸ்பட்டினதின் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டன. பருவமழை காலகட்டத்தில் சரக்குகளை ஏற்றி இறக்குவதென்பது மிகவும் சவாலானது. இடையிடையே புயலும் மதராஸப்பட்டினத்தை தாக்கிக்கொண்டிருந்தது. 1662 மே மாதம் வீசிய புயலால் ஒன்பது கப்பல்கள் சேதமடைந்தன. சாதாரண நாட்களிலும் அலை பலமாக இருந்தது. முக்குவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தே வேலை செய்தார்கள்.

 

மதராஸ்பட்டினம் கறுப்பு நகரம் (இடங்கை) என்றும் வெள்ளை நகரம் (வலங்கை) என்றும் இரண்டு பிரிவுகளாக புவியியல் ரீதியாக பிரிக்கப்பட்டு அதன் உள்ளடுக்கில் சமூகரீதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் கத்தோலிக்கர்களான முக்குவர்கள் என்னும் படகோட்டிகள், ஜாதியை கைவிட்டவர்கள் என்பதால் வெள்ளை நகரத்தில் இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியின் ஆவணங்களில் முக்குவர்களை படகோட்டிகள் என்றே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மீன்பிடி மற்றும் கப்பல் சார்ந்த தொழில்கள் செய்துகொண்டிருந்ததால் கடற்கரையை ஒட்டி அவர்கள் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

 

வெள்ளையர்களைத் தவிர்த்த அனைத்து இந்து ஜாதி மக்களும், உயர்சாதிகள் உட்பட, கருப்பு நகரத்தில் இருந்தார்கள். மீனவர்களுடன், வண்ணார்கள், நெசவாளர்கள், துணிதுவைப்பவர்களும் பெருமளவில் இருந்தார்கள்.

 

பருத்தி ஆடைகளும், மஸ்லினும் படுக்கை விரிப்புகளும் சென்னையிலிருந்து பெருமளவில் ஏற்றுமதியாகியது. மசூலிப்பட்டினத்தை ஒப்பிடும்போது சென்னையில் நெசவுப்பொருட்கள் 20% விலை குறைவாகவே கம்பெனிக்கு கிடைத்தது. மதராசப்பட்டினத்திற்கு தெற்கில் சாந்தோம் நகரத்தில் போர்ச்சுக்கீசியர்கள் இருந்தார்கள். சாந்தோம் போர்ச்சுகீசியர்களின் காலனியாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அநேகமும் தோமா கிறிஸ்தவர்கள். 1640 ஆண்டில் முடிவில் வெள்ளை நகரத்திற்கு வெளியில் 600ற்கும் அதிகமான கிறிஸ்தவ மீனவர்கள் இருந்தார்கள். 300ற்கும் அதிகமான நெசவாளர்கள்  மசூலிப்பட்டினம் போன்ற இடங்களிலிருந்து சென்னையில் குடியேறியிருந்தார்கள். நெசவுத்தொழில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தொழிலாக இருந்தது. கிறிஸ்தவ படகோட்டிகள் ஏற்கெனவே சாந்தோமில் இருந்தவர்கள்.

 

கடலிலிருந்து உள்நாட்டில் 360 அடி தூரம் வரை மீனவர்களுக்கு நில உரிமை இருந்தது. அவர்களின் ஊர்கள் 2லிருந்து 3மைல் தூரம் வரை இருந்தது. முக்குவர்கள் என்னும் படகோட்டிகள் முதலில் கறுப்பு நகரத்தில் இருந்தார்கள். 1652ம் வருடம் ஏற்பட்ட ஜாதிமோதல்களுக்குப்பிறகு, திருமணம் மற்றும் சவ ஊர்வலத்திற்கு தனியான தெருக்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் கறுப்பு நகரத்தின் கடலோரத்தில்ருந்து வெள்ளை நகரத்தின் போர்ச்சுக்கீசியர்களின் கோயில்வரை வாழ்ந்தார்கள். சில படகோட்டிகள் முத்தாள்பேட்டையின் கடலோரத்திலும் இருந்தார்கள்.

 

1670-ல் மீனவர்கள் தங்களுக்கென்று ஒரு புதிய நகரத்தை உருவாக்கினார்கள். அது முக்குவா நகரம் (முக்குவா டவுண்) அழைக்கப்பட்டது. இது வெள்ளை நகரத்திற்கு தெற்கில் இருந்தது. இதில் மீனவர்களும், படகோட்டிகளும் மட்டுமே இருந்தார்கள். இது 1673லிருந்து 1679ற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் இருந்ததாக சொல்லப்படுகின்றது. பிரஞ்சுப்படையின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மீனவர்கள் அங்கிருந்து சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டார்கள். முக்குவர்கள் என்னும் படகோட்டிகள் அவர்களின் மீன்பிடித்தொழிலுடன் கப்பல் சம்பந்தமான அனைத்து தொழிலையும் செய்துவந்தார்கள். முக்குவர்கள் கட்டுமரத்தையும் மசுளா வள்ளத்தையும் பயன்படுத்தி தொழில்செய்துவந்தார்கள். யானை, குதிரை போன்றவை கட்டுமரத்தைக்கொண்டு கப்பலில் ஏற்றி இறக்கப்பட்டது.

 

1652-ம் வருட ஜாதி பிரச்சனைகளுக்குப்பிறகு அவர்களுக்கும் கருப்பு நகரத்தில் தனியான தெருக்கள் கொடுக்கப்பட்டது. முத்தாள்பேட்டையில் படகோட்டிகள் மற்றும் லஸ்கர்களுடன் (கப்பல் கூலிகள்)  கட்டுமரக்காரர்களுக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டது. கட்டுமரக்காரர்கள் கருப்பு நகரத்திற்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்தார்கள். 1695 நவமபர் 21 நாள் வீசிய புயலில் அவர்களின் வீடுகள் பாதிப்பிற்கு உள்ளானது. கட்டுமரக்காரர்கள் ஏழ்மை நிலையில் இருந்தார்கள். இவர்கள் கட்டுமரக்கார்களுடன் சேப்பாக்கத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். சேப்பாக்கத்திலும் ஏற்கெனவே மீனவர்கள் இருந்தார்கள். ‘மைல் எண்ட்’ சாலையில் கோயில் ஒன்றை கட்டினார்கள். 1707ம் வருடம் கருப்பு நகரத்தில் செம்படவர்கள் என்னும் மீனவர்கள், கரையர்கள் என்னும் முக்குவர்கள், பட்டினவர் என்னும் கட்டுமரக்காரர்கள் என்னும் மூன்று ஜாதிகள் இருந்த தாக்க சொல்லப்பட்டுள்ளது.

 

மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிப்பதனால், அனைத்தது ஜாதி மக்களும் இணைந்திருப்பது கம்பெனிக்கு நிர்வாக ரீதியில் சிக்கலை ஏற்படுத்தியது. எனவே, ஒவ்வொரு ஜாதித் தலைவர்களும் வரவழைக்கப்பட்டு, அவர்கள் எங்கிருக்க விரும்புகின்றார்கள் என்று கேட்டு அங்கே குடியமர்த்தப்பட்டனர். நெசவாளர்கள் கருப்பு நகரத்தில் இருப்பதாக தீர்மானித்தார்கள். முக்குவர் அவர்களின் தொழில் சார்ந்து கருப்பு மற்றும் வெள்ளை நகரங்களின் கடற்கரையோரங்களில் இருந்தார்கள். வெள்ளை நகரத்தில் இந்தியர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிறிஸ்தவராகளான மீனவர்கள் தங்கள் முதலாளிகனான வெள்ளையர்களுக்குப் பக்கத்தில் கட்டுரையில் இருந்தார்கள். ஜாதி சார்ந்த பிரச்சனைகள் எழுந்தபோது, கம்பெனி நிர்வாகம் மீனவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தார்கள். அப்போது கிழக்கிந்தியக் கம்பெனியின் வியாபாரம் முழுவதும் படகோட்டிகளையே நம்பியிருந்தது.

 

படகோட்டிகளும் கட்டுமரக்காரர்களும் அவர்களின் தனித்திறமை, கடின உழைப்பு மற்றும் தைரியத்திற்காக பெரும்புகழ் பெற்றிருந்தார்கள். கட்டுமரம் என்பது ஒரு அசாதாரணமான, கடல் சார்ந்த கட்டுமானங்களில் ஒரு உன்னதமான மனிதனின் கண்டுபிடிப்பாகவே பார்க்கப்பட்டது. சுமத்தரா மற்றும் செயின்ட் ஹெலனா போன்ற கிழக்கிந்தி கம்பெனியின் வேறு குடியேற்ற நாடுகளுக்கும் மதராஸ் படகோட்டிகள் சென்று கட்டுமரத்தை எப்படி கையாலாவது என்ற பயிற்சியை கொடுத்தார்கள்.   கிழக்கிந்தியக் கம்பெனியின் வளர்ச்சி படகோட்டிகளின் உழைப்பையே நம்பியிருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்  படகோட்டிகளின் வியர்வையில் வெகுவிரைவாக  மேலெழும்பிக்கொன்டே இருந்தது.

 

மீன்பிடித்தலை கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் கட்டுப்படுத்தியிருந்து. மதராஸப்பட்டினத்தின் கடலிலும் ஆரிகளிலும் மீன்பிடிப்பதற்கான உரிமை குத்தகைக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை எடுப்பபவரை ‘மீன்பிடி விவசாயி’ என்று அழைத்தார்கள். முதலில் மீன்பிடிப்பதற்கான வரியை மீனாகப்பெற்றார்கள். பியூன் ஒருவரால் இது கண்காணிக்கப்பட்டு அவரே மீனையும் பெற்றுச்சென்றார். 1694-ம் வருடம் இது ஒட்டுமொத்தமாக அதிகமான தொகை தருபவர்களுக்கு ஏலத்தில் விடப்பட்டது. ஆறுகளில் மீன்பிடிப்பதற்கான முதல் ஏலத்தொகை வருடத்திற்கு 30 பக்கோடாக்கள். குத்தகைகாரர் மீனவர்களிடம் வரிக்கு எந்தவித கட்டுப்பாடுமில்லை. 1696-ல் கடலில் மீன்பிடிப்பதற்கான குத்தகை முக்குவா தலைவருக்கு  50 பக்கோடாக்களுக்கு கொடுக்கப்பட்டது. மக்கள்பெருக்கம் காரணமாக, செம்படவர்கள் கடலில் மீன்பிடிக்கத் துவங்கினர். மீனவர்களின் பெண்கள் வலையை சரிசெய்வது, மீனை உலர்த்துவது, மீனை விற்பனை செய்வது போன்ற வேலைகளை செய்தார்கள்.

 

கப்பல்கள் கரைக்கு வரும் நேரங்களில் மட்டுமே படகோட்டிகளுக்கு வேலையிருந்தது. எனவே, படகோட்டிகளுக்கு மீன்பிடித்தலே முக்கிய தொழிலாக இருந்தது. பருத்தி, சணல் மற்றும் தென்னை நாரினால் வலைகளை உருவாக்கினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் வேறு குடியேற்றங்களை தூதுவர்களாகவும், கடல்வழி தபால் சேவையிலும் ஈடுபட்டிருந்தார்கள். படகோட்டிகள் தங்களுக்குள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். அதுபோல், படகோட்டிகள் கம்பெனியின் விசுவாசமுள்ள ஊழியர்களாகவும் இருந்தார்கள். படகோட்டிகளைத் தவிர வேறு இனத்தவர்கள் கம்பெனியில் வேலைக்கு சேரவேண்டுமென்றால் படகோட்டிகள் கீழ்தான் வேலைசெய்ய வேண்டும்.  இதற்காக 1680ம் வருடம் கருப்பு தோமா என்பவர் முக்காடம் (தலைவர்) வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கு 70 பணம் மாதச் சம்பளமாக கொடுக்கப்பட்டது.

 

ஒரு சில மாதங்களுக்கு முன்பு  நடந்த இந்துக்கள் குறிப்பாக வண்ணார்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக மேற்கொண்ட கலகத்தில் அதற்கு முன்பிருந்த கிறிஸ்தவ முக்காடம் இந்துமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். வேலைநிறுத்தம் மேற்கொண்ட மக்கள் மதராஸப்பட்டினத்திலிருந்து சாந்தோமிற்கு சென்றார்கள். அவர்களை கட்டாயப்படுத்தி கம்பெனி நிர்வாகம் அழைத்துவந்தது.  எனவே கருப்பு தோமாவை புதிய தலைவராக (முக்காடம்) நியமித்தார்கள். அவர் படகோட்டிகள் தலைவராக வேலை பார்த்தால் கம்பெனிக்கு உண்மையாக இருப்பார் என்று நம்பினார்கள். [முக்காடம் என்பது பின்னாட்களில் மெனக்காடன் என்று மருவியது.]

 

பல நேரங்களில் தலைவர்களுக்கும் படகோட்டிகளுக்கும் பிரச்சனை வந்தது தலைவர்களை மாற்றுவதற்கு மனுக்கள் அளித்திருக்கின்றார்கள். முக்காடத்தை போல், படகோட்டிகளின் திருட்டு போன்ற வில்லங்கங்களை கண்டுபிடிபப்தற்கும், கசையால் அடிப்பதற்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு மாத சிறைத் தண்டனையும் 500 பக்கோடாக்கள் அபராதமும் விதிக்கபட்டது. போர்ச்சுகீசியர்கள் கீழிருந்த சாந்தோமில் இருந்த படகோட்டிகளும் மதராஸ்பட்டிணத்து படகோட்டிகளும் ஒரே இனம். 1722ம் வருடம் சாந்தோமிலிருந்த இரண்டு படகோட்டிகள் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். எனவே, வேலை நிறுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் சாந்தோமிலிருந்து படகோட்டிகளை இவர்கள் அழைத்து வருவார்கள் என்று நம்பினார்கள். பல தலைவர்கள் ஒரே குடும்பத்தவர்களாகவும் இருந்தார்கள்.

 

1701 ஜுன் 26ம் நாள் இடங்கை வலங்கை பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. முக்குவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு ஜாதி இல்லை அதுபோல், அவர்கள் இந்துக்களின் எந்த ஜாதியின் உட்பிரிவிலும் வரமாட்டார்கள் என்றும் அவர்களின் முதலாளிகளை அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்றும், முத்தாள்பேட்டை கடற்கரையிலிருக்கும் படகோட்டிகள், லஸ்கர் மற்றும் மீனவர்கள் அதே இடத்தில் இருக்கலாமென்றும்,இடங்கை பிரிவினருக்கு எந்த வித இடையூறும் செய்யக்கூடாதென்றும் முக்குவர்களின் தலைவர்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பனி வாக்குறுதி வாங்கியது.

 

1710ம் வருடம் 74 கப்பல்கள் சென்னைக்கு வந்தது. ஒருகப்பலில் சுமார் 400 முதல் 600 டன் சரக்குகள் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இதன் அளவு அதிகரித்டுக்கொண்டிருந்தது. படகோட்டிகளுக்கும் வளத்திற்கும்  பற்றாக்குறை எப்போதும் இருந்தது. ஒரு படகு தினமும் மூன்று முறை கப்பலிலிருந்து சரக்கு ஏற்றி இறக்க வேண்டியிருந்தது. எனவே வள்ளம் கட்டுவதற்காக பேங்க்சால் என்னும் கொட்டகையும் அமைக்கப்பட்டது. படகோட்டிகள் வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டார்கள். 1654ம் வருடம் ஒரு வள்ளத்திற்கு 2 பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இதுவே, 1678ம் வருடம் 5 பணமாக உயர்ந்தது. ஆனாலும், அவர்களின் உழைப்பிற்கு இது மிகவும் குறைவு. ஒவ்வொரு வருடமும் வளங்களை சரிசெய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கம்பெனி முன்பணமாக அவர்களுக்கு கொடுத்தது. பிறகு, இந்த தொகை அவர்களின் வருவாயிலிருந்து கழித்துக்கொள்ளப்பட்டது. புயல் மற்றும் பஞ்சங்களின் போதும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டது. காரணம், படகோட்டிகள் இல்லையென்றால் சென்னையில் வியாபாரம் என்பது இல்லை என்பதை கம்பெனி நிர்வாகம் மிகத்தெளிவாக அறிந்திருந்தது.

 

படகோட்டிகள் அநேகமும் கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களின் திருமணம் மற்றும் மரண திருப்பலிகள் வெள்ளை நகரில் இருந்த செயிண்ட் ஆண்ட்ரூ கோயிலில் நடைபெற்றது. திருவிழாக்களை செயிண்ட் ஆண்ட்ரூ கோயிலில் கொண்டாடினார்கள். சென்னையின் துவக்க காலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் மீனவர்கள் பயின்றார்கள். அதுபோல், குடிக்கும் அடிமையாக இருந்தார்கள். வெற்றிலை பாக்கு இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. ஆனால், கடலில் அவர்கள் வேறுவிதமாக, மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார்கள். காலையில் கிளம்பி சுமார் 50மைல் உள்கடலில் மீன்பிடித்துக்கொண்டு மாலையில் திரும்புவார்கள். உயர்ந்து வரும் சமூக மாற்றத்தை பயன்படுத்தி படகோட்டிகள் தங்களை மிகவும் துடிப்பான சமூக குழுவாக கட்டமைத்துக்கொண்டார்கள்.

 

1680ம் வருடம் நடந்த ஜாதி கலகத்தில் படகோட்டிகளும் கட்டுமரக்காரர்களும் பெருமளவில் இந்து மக்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார்கள். கலகக்காரர்களுடன் இணைந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த அனைத்து சரக்குகளையும் தடுத்தார்கள். காளைவண்டிகளில் கொண்டுவரப்பட்ட ஜவுளிப்பொருட்களை சேதப்படுத்தினார்கள். சில வீடுகளுக்கும் தீவைக்கப்பாட்டது. அனைவரும் சென்னையில் தங்கியிருந்தார்கள். ஆனால், கம்பெனி நிர்வாகம், சென்னையிலிருந்த அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இந்து கோயிலில் சிறைவந்தார்கள். அதன் பிறகே, மீனவர்கள் சென்னைக்கு திரும்பி வந்தார்கள். அதன்பிற்குதான், அப்போதிருந்த படகோட்டிகளின் தலைவரை மாற்றிவிட்டு புதிதாக கறுப்பு தோமாவை தலைவராக்கினார்கள்.

 

1686-ல் கறுப்பு நகரத்திற்கும் வெள்ளை நகரத்திற்கும் இடைப்பட்ட தடுப்புச்சுவரை கட்டுவதற்கான செலவை ஈடுசெய்ய வரியை உயர்த்துவதற்கு கம்பெனி தீர்மானித்தது. அனைத்து மக்களும் ஒட்டுமொத்தமாக இதற்கு எதிர்ப்பு தெரித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. சென்னைக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவருவதை தடுத்தார்கள். வரிவிதிப்பை ரத்துசெய்யாதவரை இந்த கிளர்ச்சி தொடருமென்று எச்சரித்தார்கள். ஆனால், கம்பெனி கலகக்காரர்களை கடுமையாக ஒடுக்கியபோது கிளர்ச்சியை கைவிட்டார்கள்.  வண்ணார், முக்குவர்,கட்டுமரக்காரர்கள் மற்றும் கூலிகளின் தலைவர்கள் போராட்டம் கைவிடப்பட்டதென்று அறிவித்த பிறகே வேலைக்கு திரும்பினார்கள். 1707-ம் வருடம் இடங்கை மற்றும் வலங்கை மக்களுக்கு இடையில் மிகப்பெரிய சண்டை ஏற்பட்டது. பிரச்சனை சுமார் ஆறு மாதங்கள் வரை தொடர்ந்தது.       வண்ணார்கள், முக்குவர்கள், மீனவர்கள், பெருமளவில் வெளியேறி சாந்தோமில் குடிபெயர்ந்தார்கள். பாதிரியார்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களை சமரசப்படுத்த முடியவில்லை. சாந்தோமிலிருந்த நாயக்கர் அவர்களை சென்னைக்கு அழைத்துக் கொண்டுவந்தார்.

 

கலகத்தில் ஈடுபட்ட படகோட்டிகளின் தலைவர்களான ஏற்கெனவே வேலைநீக்கம் செய்பட்டார்கள் என்பதை கருத்தில் கொண்டு தற்போதைய தலைவர்களான பாஸ்கல் மற்றும் யோவான் ‘சிலரின் தவறான ஆலோசனை காரணமாக கலகத்தில் ஈட்டுபட்டதாகவும், தாங்கள் எந்த ஜாதிக்கும் உட்படாதவர்கள் என்பதை சாந்தோமிலிருந்து திரும்பிவந்து வலங்கை கூட்டத்தாருடன் சேர்ந்தபோதுதான் புரிந்துகொண்டோம்’ என்று கவர்னக்கு மனுவளித்தார்கள்.

 

படகோட்டிகளுக்கும் கம்பெனிக்குமான உறவு எப்போதும் மென்மையாக இருந்ததில்லை. கம்பெனி ஒருபோதும் மீனவர்களை நன்றாக கவனித்துக்கொண்டதில்லை. சம்பள உயர்விற்கும், மீன்பிடி உரிமைகளுக்காவும், அதிக்கப்படியான வரிவிதிப்புகளுக்கும் கம்பனியுன் போராட்டதில் ஈடுபாடிருந்தார்கள். 1678ம் வருடம் சம்பள உயர்விக்காக போராடினார்கள். தங்களின் துடுப்புகளையும் எடுத்துக்கொண்டு சாந்தோமிற்கு சென்றுவிட்டார்கள்.சம்பள உயர்வு கிடைத்த பிறகே திரும்பி வந்தார்கள். முதலில் மனுக்கள் அளித்துப்பார்ப்பார்கள், அதன் பிறகு வேலை நிறுத்தம் கடைசியில் சென்னையை விட்டு போர்ச்சுக்கீசியரின் சாந்தோமிற்கு செல்வது என்று தங்கள் போராட்டத்தை வடிவமைத்திருந்தார்கள். அதற்கு பலனும் இருந்தது. படகோட்டிகள் இல்லாமல் வியாபாரம் ஒட்டுமொத்தமும் முடங்கும். எனவே, படகோட்டிகளின் கோரிக்கையை நிறைவேற்றித்தான் ஆகவேண்டும்.

 

படகோட்டிகள் சாந்தோமிற்கு செல்வதை தடுக்க முக்குவா நகரத்திற்கும் சாந்தோமிற்கும் இடையில் ஒரு தடுப்புச்சுவர் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தடுப்புச்சுவர் கட்டப்படவில்லை, அதற்கு பதிலாக படகோட்டிகளை உளவுபார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 1680ல் மீன்பிடிப்பதை குத்தகைக்கு விட்டபோதும் போராட்டதில் ஈடுபட்டார்கள். கோரிக்கை நிறைவேறும்வரை சென்னைக்கு மீன் எதுவும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்கள். கம்பெனி படகோட்டிகளின் கோரிக்கையை நிறைவேற்றியது. மீன்பிடிப்பதற்கான பாரம்பரியமான முழு உரிமையும் அவர்களுக்கு கிடைக்காத பட்சத்தில், மீன்பிடிப்பதற்கான குத்தகையை அவர்களே எடுத்தார்கள்.

 

1681-ம் வருடம் சென்னையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் நிலவரி விதிக்கப்பட்டது. 1693-வருடம் வரை படகோட்டிகள் இந்த வரியை கொடுக்கவில்லை. அவர்களின் வரிக்கடன் அதிகரித்துக்கொண்டே வந்தது. கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையை அவர்கள் மூடியதற்கான கூலியாக அந்த வரிக்கடன் ரத்துசெய்யப்பட்டது. அதன்பிறகு, 1695-ம் வருடம் நிலவரிக்காக படகோட்டிகள் தங்கள் படகுகளை தாங்களே பழுதுபார்த்துக்கொள்ளவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்பட்டார்கள். படகோட்டிகள் கொடுக்கவில்லை. 1697-ல் கம்பெனி படகோட்டிகளின் வரியை கட்டிவிட்டு, அவர்களின் கூலியிலிருந்து அந்த தொகையை பிடித்தம் செய்தார்கள். படகோட்டிகள் சுங்கத்துறையின் கீழ் வேலை செய்தார்கள்.

 

மீனவர்கள் கணியம் மற்றும் ஜோதிடம் பார்ப்பதில் சிறந்திருந்தார்கள். 1684 நவம்பர் 3-ம் நாள் சென்னையை மிகப்பெரிய புயல் தாக்கியது. அந்த புயலின் வருடகையை ஒரு மாத்தத்திற்கு முன்பே படகோட்டிகள் கணித்திருந்தார்கள். அந்த புயல் உயிர்சேதங்களை ஏற்படுத்தியது. பல வீடுகள் தரைமட்டமானது. பல வள்ளங்கள் கடலில் மூழ்கியது.

 

1700-ல் கருப்பு நகரத்தின் கோட்டைசுவர்கள் வலுவூட்டப்பட்டது. சுவர்கள் 17அடி அகலம் கொண்டதாக இருந்தது. கோட்டைச்சுவர்களுக்கான செலவை (8053 பகோடாக்கள்) கருப்பு நகரத்திலிருந்து அனைத்து ஜாதி மக்களிடமிருந்தும் வசூலித்தார்கள். படகோட்டிகள் வெள்ளை நகரத்தில் இருந்ததால் அவர்கள் அந்த பட்டியலில் இல்லை. [ஆர்மினியர்கள், செட்டியார்கள், மூர், கோமுட்டி, குஜராத்தி, பிராமணர்கள், அகமுடையார், செம்படவர் என்னும் மீனவர்கள்,  பட்டினவர் என்னும் கட்டுமரக்காரர்கள், கரையார் என்னும் முக்குவர்கள், இன்னும் பல ஜாதிகள் அந்த பட்டியலில் சொல்லப்பட்டுள்ளது.]

 

முக்குவர்கள் தங்கள் உயிரை பயணம் வைத்துத்தான் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். புயலோ மழையோ, வெப்பமோ குளிரோ, இரவோ பகலோ, எந்த நேரமாக இருந்தாலும், கம்பெனியின் அழிப்பிற்கு படகோட்டிகள் தயாராக இருக்கவேண்டும். பலருடைய உயிர்களை காப்பாற்றினார்கள். ஆபத்தில் உதவும் படகோட்டிகளுக்கு பதக்கங்கள் கொடுக்கப்பட்டது. படகோட்டிகளை உயர்ந்த பண்பாளர்கள் என்றே பலருடைய அனுபவக்குறிப்புகள் சொல்கின்றது. படகோட்டிகள் பலரும் விபத்தில் பலியாகியிருக்கின்றார்கள். கைகால் உடைந்து உடல் ஊனமடைந்திருக்கின்றார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் வள்ளங்கள் குறைந்த விலைக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டது. அதனால் வரும் வருமானம் பள்ளிகளுக்கும் அறநலன் சார்ந்த பணிகளுக்கும், கோயில் நிதியாகவும் முதலில் பயன்படுத்தப்பட்டது. 1774ம் வருடத்திற்கு பிறகு அந்த வருமானம், ஊனமுற்ற படகோட்டிகளுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும், படகோட்டிகளின் ஓய்வூதியமாகவும் பயன்படுத்தப்பட்டது.

 

1746ம் ஆண்டு, பிரஞ்சுப்படைகள் புனித ஜார்ஜ் கோட்டியை கைப்பற்றியபோது, பிரிட்டிஷ்காரர்களுடன் சேப்பாக்கத்திலிருந்த படகோட்டிகளும் கூடலூரிலிருந்த புனித டேவிட் கோட்டைக்கு தப்பிச்சென்றார்கள். கோட்டியை மீட்பதற்காக கடற்படையை கட்டமைப்பதில் பிரிட்டிஷ்காரர்களுக்கு படகோட்டிகள் உதவிபுரிந்தார்கள்.

 

1796-ம் வருடம் சுமார் 250 கப்பல்கள், 700 தோணிகளிலிருந்து சுமார் 1.5 லட்சம் டன் சரக்குகள் இறக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சரக்குகள் அதிகரித்துக்கொண்டிருந்தது. மதராஸப்பட்டினத்தின் முதல் 260 வருடங்களும் கடற்கரையில் முக்குவர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. அவர்கள் இல்லையென்றால் வீரியம் கொண்ட அலைகளைக்கடந்து சரக்குகளும் பயணிகளும் கடற்கரையை அடைய வாய்ப்புகள் இல்லை. முக்குவர்கள் பொருளாதாரத்திலும் கல்வியிலும் சிறிந்திருந்தார்கள்.

 

1778ற்கு பிறகு, போர்க்கப்பல்கள் மற்றும் படையினரின் வருகையும் அதிகரித்தது. 1778 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 12,000 படையினர் சென்னைக்கு வந்தார்கள். எனவே, இடப்பற்றாகுறையும், சரக்குகளை இறக்குவதற்கான படகுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, கப்பல் துறை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 1781-ம் வருடம் கோட்டைக்கு தெற்கிலிருந்த மீனவர்களை கருப்பு நகரத்தில் ஒரு நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டு அதில் படகோட்டிகளை இடம்மாற்றம் செய்ய தீமானிக்கப் பட்டது. ஆனால், இதற்கு படகோட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவர்கள் சேப்பாக்கத்திற்கு மாற்றப்பட்டார்கள். ஆனால், படகுத்துறை கட்டும்முயற்சி கிடப்பில் போடப்பட்டது.

 

சேப்பாக்கத்திலிருந்து ஒருபகுதி படகோட்டிகள் 1799ம் வருடம் ராயபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள். கத்தோலிக்க படகோட்டிகளால் 1806ம் வருடம் கோயில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டு அந்த நிதியைக்கொண்டு புனித பீட்டர் கோயிலை 1829ம் வருடம் கட்டினார்கள்.

 

1787ம் வருடம் சென்னையில் மீன் பற்றாக்குறை நிலவியது. வட சென்னையின் எண்ணூரிலிருந்து தெற்கில் கோவளம் வரை மொத்தம் 26 மீனவ கிராமங்ககள் இருந்தன.  புலிக்காட்டிலிருந்து மலபார் மீனவர் ஒருவர் பெருமளவில் சென்னைக்கு மீன் வழங்கிக்கொண்டிருந்தார். இறைச்சி மற்றும் கோழி வியாபாரிகள் விலையை குறைப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். கொத்தவால் சாவடியில் இருந்த மார்க்கெட் சீர்குலைந்திருந்ததால் புதிதாக சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்பட்டது.

 

சில நேரங்களில் படகோட்டிகள் வேண்டுமென்றே, வள்ளத்தை அலையில் கவிழச்செய்து கம்பனிக்கு சேதத்தை உருவாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஒரு கப்பலின் ஒட்டுமொத்த இழப்பில் 90 விழுக்காடு கப்பலிலிருந்து சரக்குகளை கடற்கரைக்கு கொண்டுவரும்போது ஏற்படுகின்றதென்றும், இது நிகர லாபத்தில் 20 விழுக்காடு என்றும் கணக்கிடப்பட்டது. எனவே கப்பல்களை பாதுகாப்பாக நங்கூரமிட்டு எந்த இழப்புமில்லாமல் சரக்குகளை இறக்குவதற்கு துறைமுகம் கட்டுவதுதான் தீர்வு என்று முடிவுசெய்யப்பட்டு 1861ம் வருடம் முதல் கப்பல்துறை கட்டிமுடிக்கப்பட்டது. அதிலிருந்து படகோட்டிகள் என்னும் முக்குவர்களின் முக்கியத்துவம் குறையத்துவங்கியது.

 

1868-ம் வருடம் வீசிய புயலினால், உயரம் குறைவாக கட்டப்பட்ட கப்பல்துறையின் 500மீட்டர் நீளத்திற்கான அலைதடுப்புச்சுவர் சேதமடைந்தது. அதன்பிறகு 1876 தற்போதைய துறைமுகப்பணிகள் துவங்கப்பட்டு 1900-ம் வருடம் துறைமுக வேலைகள் முடிவடைந்தது. ஆனால், கிழக்கு நோக்கியிருந்த துறைமுக வாயிலில் நீரோட்டம் காரணமாக வண்டல்படிவு ஏற்பட்டு, துறைமுக வாயில் வடகிழக்காக மாற்றியமைக்கப்பட்டது. சென்னை துறைமுகம் 1904-ம் ஆண்டிலிருந்து முழுமையான பயன்பாட்டிற்கு வந்தது.

 

சென்னை துறைமுகம் கட்டப்பட்ட பிறகு, துறைமுகத்தின் வடக்கில் கடலரிப்பும் தெற்கில் வண்டல் படிவும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. துறைமுக கட்டுமானத்திற்கு முன்னர், கடற்கரை சாலையுடன் ஒட்டியிருந்த கடல், மணலேற்றம் காரணமாக கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டே செல்கின்றது. மெரினாவின் பரந்த கடற்கரை அவ்வாறு உருவானதுதான். சென்னை துறைமுகம் படகோட்டிகளின் வீழ்ச்சியின் துவக்கமாக அமைந்தது. 260 வருடங்கள் கோலோச்சிய பிரிட்டிஷ் ஆட்சி, அடுத்த 50 ஐம்பது வருடங்களில் முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ்காரர்களைப்போல்,படகோட்டிகளும் நம் கண்களிலிருந்து மறைந்துபோனார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *