*மரிய லூர்தம்மாள் சைமன்*

முன்னாள் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய லூர்தம்மாள் சைமன் அவர்களின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடவேண்டும் என்னும் வேண்டுகோளை நண்பர் குறும்பனை பெர்லின் தொடர்ந்து அரசிற்கு வைக்கின்றார். அந்த கோரிக்கை என்னவானது என்பதை “மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகம் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார். லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிலைவைக்கவேண்டும், அவர் பிறந்த ஊரான மணக்குடி கிராமத்திலிருக்கும் பாலத்திற்கு அவர் பெயர் சூட்டவேண்டும், தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு அவர் பெயரை வைக்கவேண்டும், குளச்சலில் ஒரு மணிமண்டபம்  கட்டவேண்டும் என்னும் எளிய கோரிக்கைகளுக்குக்கூட போராடவேண்டியிருப்பது வருத்தமானது.

[இந்த புத்தகத்திலிருக்கும் ஒரு சிறு தவறை வெளிப்படையாக சுட்டிக்காட்டவேண்டியிருக்கின்றது. லூர்தம்மாள் சைமனின் பிறந்த நாளாக 26/09/1911 என்று சொல்லப்பட்டுள்ளது. இதைப்போல, ஏற்கெனவே வெளிவந்த ஜோ. தமிழ்செல்வனின் “உள்ளாட்சி & மீன்வளத்துறை மந்திரி லூர்தம்மாள் சைமன்” என்னும் புத்தகத்திலும் 26/09/1911 என்பதே பிறந்தநாளாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதுபோல் அரசிற்கு வைக்கப்பட்டிருந்த கோரிக்கையிலும் 26/09/1911 என்று பிறந்த நாளாக சொல்லப்பட்டு, 2011 நூற்றாண்டுவிழா கொண்டாடவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அரசு ஆவணப்படி அவரது பிறந்த நாள் 26/09/1912. இந்த தவறை சரிபார்த்து திருத்தம் செய்ய அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.]

 

காங்கிரஸ் பேரியக்கம் பல தன்னலமற்ற ஒப்பற்ற தலைவர்களை உருவாக்கியது. கேரளக்கடற்கரையைப் பொறுத்தவரையில் கே. காமராஜரின் அமைச்சரவையில் இடம்பெற்ற மரிய லூர்தம்மாள் சைமன் மற்றும் ஜவகர்லால் நேருவின் தலைமையில் அமைந்த முதல் இந்திய பாராளுமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனி மஸ்கரின் என்னும் இரண்டு சிறுபான்மை சமூகத்தைச்சார்ந்த பெண்தலைவர்கள் மிக முக்கியமானவர்கள். தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், ஊழல்கறை படியாத, அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் கொண்டுவந்த நலத்திட்டங்கள், மீனவர்களின் மீதான அவரது பாசம், அவரது மனிதாபிமானம், அவரை அரசியலிலிருந்து திட்டமிட்டு நிர்மூலமாக்கியது என்பனவற்றை இந்த புத்தகம் விரிவாக அலசுகின்றது.

மரிய லூர்தம்மாள் சைமன், 1912ம் வருடம் செப்டம்பர் 26 நாள் மணக்குடி கடற்கரைகிராமத்தில்  பிறந்தார். நாகர்கோவில் செயிண்ட் ஜோசப் கான்வென்டில் பத்தாம் வகுப்புவரை ஆங்கிலவழியில் படித்து அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் வேலைபார்த்தார். அவரது கணவர் சைமன் அலெக்சாண்டர் அவர்கள் கொல்லங்கோடு மற்றும் விளவங்கோடு தொகுதிகளில் வென்று இரண்டுமுறை திரு-கொச்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்தபிறகு 1957ம் வருட தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்று, கே. காமராஜரின் இரண்டாவது அமைச்சரவையில் உறுப்பினரானார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியில், உள்ளாட்சித்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக லூர்தம்மாள் சைமன் பொறுப்பிலிருந்தது நமது நல்லூழ். காமராஜரின் அனைத்து நலத்திட்டங்களையும் வெற்றிகரமாக செய்துமுடிக்க பி.கக்கன்,  ஆர். வெங்கட்ராமன், எம்.பக்தவச்சலம், சி.சுப்ரமணியம் போன்ற தலைவர்களுடன் உறுதுணையாக நின்றார்.

இந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத்திட்டதை நடைமுறைப்படுத்தியிருந்த   அமெரிக்க தொண்டு நிறுவனமான கேர் (CARE – Cooperative for Assistance and Relief Everywhere) அமைப்புடன் இணைந்து தமிழகத்தில் கே. காமராஜர் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை உள்துறை அமைச்சர் லூர்தம்மாள் சைமன் விரிவுபடுத்தி அனைத்து கிராமங்களுக்கும் கொண்டுசென்றார் என்று அரசு அறிக்கை சொல்கின்றது. இதனால் சுமார் 14 லட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள்.

இதைப்போல், காமராஜரின் கல்வித்திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தினார். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதில் மிகுந்த அக்கறைகாட்டினார். பொதுவாக கடல்சார்ந்த பிரச்சனைகள் வரும்போது, மீனவர்கள் கல்வி கற்று மாற்று வேலைகள் தேடவேண்டும் என்று அறிவுரைகள் சொல்லப்படுவதுண்டு. இது கடற்கரைகளில் கல்வியறிவு இல்லை என்னும் பொதுப்புத்தியின் மாயத்தோற்றம் மட்டுமே. 2010வருடத்தின் தமிழக கடற்கரை மீனவர்களின் கணக்கெடுப்பின்படி, கன்னியாகுமரி கடற்கரை மீனவர்களின் கல்வியறிவு 94.66 சதவிகிதம். இது வேறெந்த சமூகத்திற்கும் குறைவானதல்ல. இதில் லூர்தம்மாள் சைமனின் பங்களிப்பு முக்கியமானது.

தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களை (பஞ்சாயத்து ராஜ்) செயல்படுத்தியதை லூர்தம்மாள் சைமன் அவர்களின் முக்கியமான சாதனையாகச் சொல்லலாம். 1958ம் வருடம் மெட்ராஸ் பஞ்சாயத்து , அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1959ம் வருடம் சட்டமாக்கப்பட்டது. 1960 வருட காந்தி ஜெயந்தி நாளிலிருந்து ஊராட்சி மன்றங்கள் மூன்று கட்டமாக, 32 மாதகாலத்தில் செயல்முறைப்படுத்தினார். 1962ம் வருடத்தில் 12,360 ஊராட்சிகள், 597 பேரூராட்சிகள், 374 பஞ்சாயத்து யூனியன்களையும் உருவாக்கி காந்தியின் கனவுத்திட்டத்தை தமிழக கிராமம் முழுவதும் கொண்டுசென்றார்.

1956ம் வருட நிலவரப்படை, நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் 48 படுக்கை வசதிகளே இருந்தது. இந்த மருத்துவமனையை விரிவுபடுத்த லூர்தம்மாள் சைமன் காமராஜரிடம் வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை ஏற்று, 1960ம்வருடம் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளும் கொண்ட, 140 படுக்கை வசதிகளுடன், புதிய மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் எண்ணற்ற ஏழைகள் பயனடைந்தார்கள். இன்று அது  தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக்கல்லூரியாக வளர்ந்து நிற்கின்றது.

ஆனால், காமராஜர் புதிய மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்ததை நாகர்கோவில் உள்ளூர் மருத்துவர்கள் விரும்பவில்லை. தனியார் மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் லூர்தம்மாள் சைமன் அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையை செயல்படுத்தினால் உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் தனக்கு எதிராக செயல்படுவார்கள் என்பதும், தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதை அவர் அறிந்திருந்தும் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார். இதுபோன்ற சுயநலமற்ற செயல்பாடுகளுக்கு உறுதியான ஆன்ம பலமும், நேர்மையும் வேண்டும்.

இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒருபகுதியாக, மணிமுத்தாறு, வைகை அணைத்திட்டங்கள், கிராமங்களுக்கான அடிப்படை மின்சார வசதிகள், அடிப்படை சுகாதாரம் என்று பல நலத்திட்டங்கள் தமிழகத்தில் காமராஜரால் நடைமுறைப்படுத்தப்பட்டன. மணிமுத்தாறு அணைக்கட்டு அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.

ஐந்தாட்டுத்திட்டதின் ஒரு பகுதியாக மீனவர்களுக்கு விசைப்படகுகளும் நைலான் வலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டது. விசைப்படகுகள் தமிழகத்தின் தென்மேற்கு கடற்கரையின் பொருளாதாரத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்தியது. கன்னியாகுமரி மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஒப்பற்றிருப்பதற்கு இதுவே அடித்தளம் அமைத்தது. பாரம்பரியத்தை இழக்காத புதிய தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலேயே அவர் ஆர்வம் காட்டினார். [லூர்தம்மாள் சைமன் அவகளின் காலகட்டத்திற்குப் பிறகு, திமுக அரசால் இழுவைமடிகள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.]

பெருந்தலைவர் கே. காமராஜர் அல்லது பி. கக்கன் என்று சொல்லும்போது, நமக்கு லூர்தம்மாள் சைமன் என்னும் பெயரும் ஞாபகத்திற்கு வரவேண்டும். ஆனால், அவரது பெயரை அவர் சார்ந்த மதம் மற்றும் ஜாதியை காரணம் காட்டி, அவரது பங்களிப்பை மறைப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. இது ஒரு வரலாற்றுப்பிழையாகவே எதிர்காலத்தில் எஞ்சும்.

இந்த நூலில் பல நெகிழ்ச்சியான, லூர்தம்மாள் சைமன் அவர்களின் மனிதநேயம் மிக்க சம்பவங்களும் இதில் சொல்லப்படிருக்கின்றது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வேண்டுகோள்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை. ஆனால், இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கும் லூர்தம்மாள் சைமன் யாரென்று தெரியாமலிருப்பது வியப்பாக இருக்கின்றது. ‘காங்கிரசை காங்கிரசே அழிக்கும்’ என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இருப்பினும், விடாப்பிடியாக, இந்த வேண்டுகோள்களை மீனவர்களின் உரிமையாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து சாத்வீக வழியில் போராடும் நண்பர் பெர்லின் அவர்களுக்கு என்னுடைய அன்பும், பாராட்டுகளும். உங்கள் கனவு மெய்ப்படும் என்று நம்புவோம். வாழ்த்துகள்!!!

[“மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நூற்றாண்டு – குப்பையில் போன கோப்புகள்” என்னும் புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரை]

This article has 1 comments

  1. Edwin Jerome Reply

    ஆனி மஸ்கரீன் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கவில்லை அவர் திருவாங்கூரில் அமைச்சராக இருந்தார் மேலும் Indian constitutional assembly உறுப்பினராக இருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *